முஷ்டிபள்ளி தண்டா, நல்கொண்டா மாவட்டம், தெலுங்கானா: 2017, ஜூலை 6ஆம் நாள், 26 வயதான ரமாவத் சால்லிக்கு வழக்கம் போலவே புலர்ந்தது. வழக்கம் போல் பருத்தி எடுக்க, கூலி வேலைக்கு சென்றார். வீடு திரும்பிய போது தண்டா (பழங்குடியினர் பகுதி) மக்கள், அவரது வீட்டின் முன், கணவர் மாதுவின் சடலம் முன்பு சோகத்துடன் நின்றிருந்தனர். “கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை” செய்து கொண்டதாக, நா தழுதழுக்க ரமாவத் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். கடன் தொல்லையால் 29 வயது மாது, பூச்சி மருந்து குடித்துள்ளார்.

மாது தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் பருத்தி சாகுபடி செய்திருந்தார். இதற்காக, தனி நபர்களிடம் அதிக வட்டிக்கு ரூ.6 லட்சம் (8,500 டாலர்) கடன் வாங்கியிருந்தார். ஆனால், மழை பொய்த்ததாம் இரு ஆழ்துளை கிணறு அமைத்தார். ஆனால், தண்ணீரின்றி -- தெலுங்கானா மாநிலம் முழுவதுமே நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்தில் உள்ளது -- பருத்தி சாகுபடி நஷ்டத்தை தந்தது. ஆண்டுக்கு 24% வட்டியுடன் கடனை திரும்பிச் செலுத்த மாது போராடினார்.

மாதுவின் மறைவுக்கு பிறகே கடன் இருப்பது அவரது மனைவி சால்லிக்கு தெரியும். கடன் கொடுத்தவர்கள் தற்போது அவரை திரும்பச் செலுத்துமாறு நெருக்கடி தருகிறார்கள். ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் கூட, மாநில அரசிடம் இருந்து எவ்வித இழப்பீடு, நிவாரணம் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. ஏனெனில், அம்மாவின் பெயரில் நிலம் இருப்பதால் மாதுவின் மரணம், விவசாயிகள் தற்கொலை என்று கருத முடியாது என, உள்ளூர் வருவாய் நிர்வாகம் கைவிரித்துவிட்டது.

தற்போது நிலத்தை சால்லியே கவனித்து வருகிறார். இந்தாண்டு, ரூ.20,000 கிடைக்கும் என்று நம்புகிறார் --அதாவது மாதத்திற்கு ரூ.1,600 அல்லது நாளொன்றுக்கு ரூ.53. இது உலக வங்கி வருமைக்கோடு அளவாக நிர்ணயித்த நாளொன்றுக்கு 1.5 டாலர் (ரூ.106) என்பதை விட, இது குறைவு. மழை குறைவாக இருந்தால் விளைச்சலும் குறைவாக இருக்கும். நல்ல மழையின் போது ஏக்கருக்கு ஆறு, ஏழு குவிண்டால்கள் (100 கிலோ); இம்முறை மூன்று குவிண்டால்கள் மட்டுமே கிடைக்கலாம்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், விதை மற்றும் உரங்களை வாங்குவதற்கு சால்லிக்கு கடன் வழங்கிய உள்ளூர் விதை வியாபாரிக்கே தற்போது சாகுபடியையும், முன்பே ஒப்புக் கொள்ளப்பட்ட விலையான குவிண்டாலுக்கு ரூ. 5,100 என்று கொடுக்க வேண்டும். அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை, குவிண்டாலுக்கு ரூ .5,450 ஆகும்.

சாலி தனது வாழ்வாதாரத்திற்காக கூலி வேலைக்கு செல்கிறார். இதுவும் வேளாண் சாகுபடி காலத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதால், தையல் பணிக்கும் செல்கிறார். ”இட்ல எல பதகல அம்மா?” அதாவது, இப்படி இருந்தால் நான் எப்படி பிழைப்பை ஓட்டுவது? என்று, சால்லி பரிதாபத்தோடு கேட்கிறார்.

தெலுங்கானாவில் 55.5% விவசாயிகள் வேளாண்மையையே நம்பியுள்ள சூழலில், அவர்களது துயரின் வடிவமாக, சாலி உள்ளார். 2018 நவ. 29 மற்றும் 30ஆம் தேதிகளில் டெல்லியில் நடந்த ‘டெல்லி சலோ’ என்ற பேரணியில் பெண் விவசாயியாக சாலி பங்கேற்றார். ‘கிஸான் முக்தி’ (விவசாயிகள் விடுதலை) எனப்படும் கடன்களில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை 2018 மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு இது நடந்தது. இதன் மூலம், விவசாயி நிறுவன கடன் பெறும் உரிமை, இயற்கை பேரிடரின் போது கடன் தள்ளுபடி மற்றும் நிவாரணம், வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாத மசோதா 2018 மூலம் கிடைக்கும்.

சாலி போன்ற பெண்கள் விவசாயிகள் பெண்களுக்கு உரிமையை அளிக்கும் மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது விவசாயிகளாக பெண்களுக்கு அங்கீகாரம் அளிப்பதோடு, நிலப்பகுதி, நீர் ஆதாரங்கள், நிறுவன கடன் ஆகியவற்றிற்கான அணுகலைக் ஏற்படுத்துகிறது.

இந்தியா முழுவதும் விவசாயிகள் அண்மைக்காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாகுபடி குறைவால் -- இதற்கு காலநிலை மாற்றம், தொடர் வறட்சி, வெள்ளப்பெருக்குதல், பூச்சி தாக்குதல்கள் போன்றவை காரணமாக -- ஏற்ற இறக்கம் அல்லது குறைவான ஊதியம் போன்றவை பண்ணை பொருளாதாரத்தை தகுதியற்றவையாக்கி வருகின்றன.

தெலுங்கானா மாநிலம் இம்மாதம் ஒரு புதிய அரசை தேர்வு செய்யவுள்ள நிலையில், அங்குள்ள 5 மாவட்டங்களில், (வாரங்கல் நகர்ப்புற மற்றும் கிராமப்புறம், மத்திய தெலுங்கானாவில் ஜங்கன், கிழக்கில் ஜெயஷங்கர் பூபல்பள்ளி, தெற்கில் நல்கொண்டா மற்றும் வடக்கு தெலுங்கானாவில் அடிலாபாத்) தற்கொலை விகிதங்கள், அதற்கான காரணிகள் குறித்து அறிய, இந்தியா ஸ்பெண்ட் குழு பயணித்தது.

தெலுங்கானா விவசாய நெருக்கடி

வலுவான மக்கள் கோரிக்கைக்கு பின், இந்தியாவின் புதிய மாநிலமாக, ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா உருவானது. இதன் முதலாவது முதலமைச்சராக கே. சந்திரசேகரராவ் (கே.எஸ்.ஆர். என அறியப்படுபவர்) தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டி.ஆர்.எஸ்) சார்பில் பொறுப்பேற்றார். விவசாயிகளுக்கு இணக்கமான தெலுங்கானா மாநிலத்தை பங்காரு தெலுங்கானா (தங்கத் தெலுங்கானா) என மாற்றுவதாக உறுதியளித்தார்.

மாநிலத்தின் மக்கள்தொகையில் 55.5 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு விவசாயமே வாழ்வாதாரமாக உள்ளது. மாநில காவல்துறை புள்ளி விவரங்களின்படி தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 2,190 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; அதாவது, நாளொன்றுக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர். தேசிய குற்ற ஆவணப்பணியகம், 2015 முதல் விவசாயிகளின் தற்கொலை பற்றிய தகவல்களை வெளியிடாத நிலையில், சமூக ஆர்வலர் கொண்டல் ரெட்டி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இவ்விவரங்களை பெற்றுள்ளார்.

இதில் 124 தற்கொலைகள், முதல்வர் சந்திரசேகரராவின் தொகுதியான கஜ்வாலின் கீழ் உள்ள சித்திபேட் மாவட்டத்தில் வருகிறது. கடந்த 2015-ல் மகாராஷ்டிரா, கர்நாடகாவிற்கு அடுத்ததாக, அதிக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட 3வது பெரிய மாநிலமாக தெலுங்கானா உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தெலுங்கானா காவல்துறையிடம் இருந்து கொண்டல் ரெட்டி பெற்ற தற்கொலை விவரம். மாநிலம் உருவான 2014 முதல் 2018 இடையே, 2190 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், சமூக ஆர்வலர்களின் கணக்குப்படி, 3,799 விவசாயிகள்; அதாவது 73% , இது தேசிய சராசரியை விட அதிகம்.

மாநில அரசின் புள்ளி விவரங்களின்படி, 2015 (948) மற்றும் 2018 (232) ஆம் ஆண்டுகளில் விவசாயிகளின் தற்கொலை 75% குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் உரிமை ஆர்வலர்களோ, இந்த இரு எண்ணிக்கையும் குறைந்து மதிப்பிடப்பட்டுள்ளது என்கின்றனர்.

தெலுங்கானா விவசாய அமைப்புகளின் கூட்டாளியான ரித்யூ ஸ்வராஜ்ய வேதிகா (ஆர்.எஸ்.வி. விவசாயிகளின் சுயராஜ்ஜிய அமைப்பு) செய்திகளின் அடிப்படையில் காவல் நிலையங்களில் சேகரித்த புள்ளி விவரங்களின்படி, 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில், 3,779 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; இவர்களின் 210 பேர் பெண்கள். இந்த புள்ளி விவரமும் 2014 மற்றும் 2018 இடையே தற்கொலை எண்ணிக்க்கையில் சரிவை காட்டுகிறது; எனினும் அரசின் எண்ணிக்கையைவிட மிகவும் குறைவு.

மாநில அரசு வெளியிட்டுள்ள தெலுங்கானா சமூக மேம்பாட்டு அறிக்கையின்படி. தெலுங்கானா கிராமப்புற விவசாயிகளில் 89% பேர் கடனில் உள்ளனர்; இது, ஆந்திராவுக்கு அடுத்ததாக தேசிய அளவில் இரண்டாவதாகும். இந்தியாவின் மற்ற பகுதி சராசரி, 52% ஆகும். இதில், 65% கடன்கள் தனியார் நிறுவனங்களால் தரப்பட்டவை. ஏனெனில் அரசு வங்கிகள் நிலத்தின் பேரில் உத்தரவாதமின்றி கடன் கொடுக்கத் தயங்குகின்றன. இந்த கடனில் 70%, நிலத்தடி நீர்மட்டம் குறைந்த காரணத்தால் விவசாய நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்ததால் ஏற்பட்டவை என்று அறிக்கை தெரிவிக்கிறது.

தெலுங்கானாவில் விவசாய நிலத்தால் வருவாய் மிகக்குறைவாக உள்ளது; ஒரு சிறிய விவசாயி (2 ஹெக்டேர் நிலம் முதல் 4 ஹெக்டேர் வரை வைத்திருப்பவர்) மாதத்திற்கு சராசரியாக 4,637 ரூபாய் ஈட்டுகிறார்; தொழிலாளிக்கு 1,319 ரூபாய் கிடைப்பதாக, வருமானம், செலவினம், உற்பத்தி சொத்துக்கள் மற்றும் இந்தியாவில் விவசாயக் குடும்பங்களின் கடன்கள் குறித்த தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) 2012-2013 அறிக்கை தெரிவிக்கிறது. ரூ.200 என்பது விவசாயத்திற்கான குறைந்தபட்ச கட்டாய கூலித்தொகையைவிட குறைவானது. (திறன் குறைந்த தொழிலாளர்களுக்கு நாளொன்ன்றுக்கு 300 ரூபாய்க்கு மேல் உள்ளது; மற்றும் திறன்வாய்ந்த மற்றும் பகுதி திறமை கொண்டவர்களை விட அதிகம்).

விவசாய அழுத்தங்களை பெண்களும் சம அளவில் சுமைக்கின்றனர். இந்தியாவின் மற்ற பகுதிகளில், தெலுங்கானா விவசாயத்தின் பங்கு பெரும்பாலும் மறைத்து வைக்கப்பட்டுள்ளது - தெலுங்கானாவில் 57% தொழிலாளர்களில் பெண்கள் 36 சதவீதம் பேர் விவசாய தொழிலாளர்கள் என 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. எனினும், விவசாயிகள் என்று கணக்கில் கொள்ளாததால், எவ்வித நிறுவன ஆதரவும் கிடைக்கவில்லை. சமவிகிதமற்ற கூலியைத் தான் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பெண்கள் ரூ.200, ஆண்கள் ரூ.300 விவசாய தினக்கூலியாக பெறுகின்றனர்.

எனினும், கடனை திருப்பி செலுத்த வேண்டி, கணவர், குடும்பத்திற்கு உதவியாக விவசாய நிலங்களில் பெண்கள் உதவி புரிகின்றனர். கடன்கள், சாகுபடி பொய்த்து போனதால் ஏற்படும் குடும்ப வன்முறைகளையும் சகித்து கொள்கின்றனர். கடன் நெருக்கடியால் கணவர் தற்கொலை செய்து கொண்டால், (கலாச்சார ரீதியாக தெலுங்கானாவில் கடனுடன் இருப்பது அவமானமாக கருதப்படுகிறது) தனியாளாக விவசாயத்தை நிர்வகிக்கின்றனர். இவை எல்லாவற்றிற்கும் முதன்மையாக குழந்தைகள், வயதானவர்கள், இயலாதவர்களையும் கவனித்து கொள்கின்றனர்.

நிலத்திற்கு சமமற்ற அணுகல்; நில சீர்திருத்தங்கள் தோல்வி

மாநிலத்தில் நில சீர்திருத்தங்கள் மற்றும் மறுவிநியோகம் ஆகியவற்றின் பெரும் தோல்வியானது, தெலுங்கானா விவசாயிகளின் துயரங்களாக வேரூன்றின; அத்துடன் உயர்மட்ட அளவிலான விவசாயப் பொருளாதாரம் கிடைக்காததும்.

கடந்த 2000-01 மற்றும் 2010-11இடையே தெலுங்கானாவின் பயன்பாட்டு நிலங்களின் சராசரி அளவு 1.37 ஹெக்டேரில் இருந்து 1.12 ஹெக்டேராக குறைந்துள்ளது. இது, மக்கள்தொகை அழுத்தங்கள் மற்றும் விவசாயம் அல்லாத நோக்கங்களை நோக்கி செல்வதை இவை இரண்டும் குறிப்பதாக, தெலுங்கானா சமூக மேம்பாட்டு அறிக்கை தெரிவிக்கிறது.

வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு வந்த பெரிய பகுதிகளை விவசாயம் சாராத பணிகளுக்கு திருப்பிவிடப்படுகின்றன. தொழிற்சாலைகள், வீட்டுமனை, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ரூ.80,000 கோடியிலான (11 பில்லியன் டாலர்) காளீஸ்வரம் நீர்ப்பாசன திட்டம் போன்றவை மேற்கொள்ளப்படுவதாக, நில பயன்பாட்டு முறைகளை படித்தவரும், ஆராய்ச்சியாளரும், பெண்கள் விவசாயிகளுக்கான அமைப்பான மஹிளா கிஷான் ஆதிகார் மஞ்ச் (MAKAM) உறுப்பினருமான உஷா சீதாலட்சுமி தெரிவித்தார்.

இத்தகைய நிலம் திசை மாற்றப்படுவது, "ஒரு ஊக வர்த்தகத்தை" ஏற்படுத்தி உள்ளது. சிறிய மற்றும் குறு விவசாயிகளால் இதை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு, குத்தகை விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, தொழிற்சங்கவாதியும், ஆர்.எஸ்.வி.யின் மாநில அமைப்பாளருமான ரவி கன்னேகந்தி தெரிவித்தார்.

மேலும், 18 ஏக்கர் நிலம் "பாசன நிலம்" (பாசனத்தின் சில வடிவங்களுடன்) மற்றும் 54 ஏக்கர் உலர் நிலப்பகுதியை உரிமம் கொள்ளும், நில உச்சவரம்பு சட்டம் 1973-ஐ நிறைவேற்றுவதில் மாநில அரசு தோல்வியடைந்தது என்று, கன்னேகந்தி கூறினார். நில உரிமம் சிலர் கைகளிலேயே குவிந்துள்ளது.

இதன் விளைவாக, நடுத்தர மற்றும் பெரிய அளவில் (4 ஹெக்டேரிலிருந்து 10 ஹெக்டேர் மற்றும் அதற்கு மேல்) வைத்திருப்பது, மாநில நிலப்பரப்பில் 19%-க்கும் அதிகம் என்று விரிகிறது. இது, மொத்த செயல்பாட்டு பங்குகளில் 3.3% ஆகும். குறு நிலம் (1 ஹெக்டருக்கு கீழ்) வைத்திருப்போர் மொத்த சொத்துக்களில் 62%, ஆனால் 25% நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, தெலுங்கானா சமூக மேம்பாட்டு அறிக்கை தெரிவிக்கிறது.

கிராமப்புற குடும்பங்களில் 43.3% பேர் நிலமற்றவர்கள். மக்கள்தொகையில் 15.5% என்றுள்ள தாழ்த்தப்பட்டவர்கள் 9.6% நிலப்பரப்பை மட்டுமே பயன்படுத்துகின்றனர். பெண்கள், 22.38% பயன்பாட்டு நிலத்தை வைத்திருந்தாலும், 19.6% நிலத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்று, சமீபத்திய வேளாண்மை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது. பெண்கள் வைத்திருக்கும் நிலத்தின் சராசரி பரப்பு 1.02 ஹெக்டராகவும், ஆண்களுடையது 1.14 ஹெக்டராகவும் உள்ளது.

நில உரிமையாளர்களூக்கும், விவசாயிகளின் தற்கொலைகளுக்கும் இடையே ஒரு தொடர்பு இருந்திருப்பது ஆய்வில் தெளிவாக தெரிகிறது என, 23 மாவட்டங்களில் 692 விவசாயிகள் தற்கொலை பற்றி விசாரித்த ஆர்.எஸ்.வி. மற்றும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சஸ் (TISS) 2018 ஆம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்களில் 92.5% பேர் நிலமற்ற அல்லது சிறு, குறு விவசாயிகள் என்று தெரிய வந்தது.

சமமற்ற அணுகல் தொடர்பான, குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பான அரசு பதிலில், குறைந்தது மூன்று ஏக்கர் நிலம் தலித்துகள் (இந்து சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள்) இடையே வினியோகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மாநில அரசு இதற்காக, ஏக்கருக்கு ரூ.7 லட்சம் என்ற செலவில் நிலம் வாங்கும் திட்டத்தில் நிலமற்ற ஏழை, தலித் விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படது. உறுதியளித்தபடி, 900,000 ஏக்கர் நிலத்தில், 14,620 ஏக்கர் (1.6%) நான்கு ஆண்டுகளில் 5,759 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

“ஆனால், கே.எஸ்.ஆர். உறுதியளித்தபடி, இங்குள்ள எந்தவொரு தலித் குடும்பமும் ஒரு ஏக்கர் நிலத்தை கூட பெறவில்லை. என்னை போன்ற அரை ஏக்கர் கொண்ட விவசாயிக்கோ, ஏன் நிலமே இல்லாதவருக்கு கூட எதையும் வழங்கவில்லை” என்று, தலித் வகுப்பு இளைஞர் நரேஷ் கூறினார். இவர், நல்கொண்டா மாவட்டம், மிகமோசமான ஒன்றான சந்தம்பேட் மண்டலத்தில் (தெலுங்கானாவில் நிர்வாக வசதிக்காக இங்குள்ள ஒன்றியம் போல் பிரிக்கப்பட்ட பகுதி) கோகிலபுரம் கிராமத்தை சேர்ந்தவர்.

இத்தகைய திட்டங்கள் நடைமுறைக்கு உட்பட்டவை அல்ல. கன்னகந்தி கூறுகையில், நில உச்சவரம்புச் சட்டத்தை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிலத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றார். "துரதிருஷ்டவசமாக, நில சீர்திருத்தங்கள் மற்றும் நில மறுசீரமைப்பு அரசியல் நிரலில் இருந்து வெளியேறியுள்ளன," என்றார். அரசியல் கட்சிகள் வருமானம், உணவு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு ஆகியவற்றை கவனத்தில் செலுத்தாமல் சிறு நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்கே வாக்குறுதி தருகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

கூடுதல் குத்தகை; குறைந்த பயன்

தெலுங்கானாவுக்கும் பொருந்தக்கூடிய ஐதராபாத் குடியுரிமை மற்றும் விவசாய நிலம் சட்டம் -1950, நிலத்தை வெளி வாடகைக்கு விடுவதை தடை செய்கிறது. எனினும் கடந்த பத்தாண்டுகளில் சமனற்ற அணுகல், துண்டு துண்டு நிலம் வைத்திருத்தல் உள்ளிட்டவை சிறு, குறு விவசாயிகளை சாத்தியமான வாழ்வாதாரத்திற்காக, விவசாயத்தில் இருந்து நிலங்களை வாடகை உள்ளிட்ட பயன்பாட்டுக்கு விடச் செய்தது.

பயன்பாட்டு நிலங்களை குத்தகைக்கு விடுவது என்பது, 2002-03ஆம் ஆண்டில் 4.7% என்பது, 2014ஆம் ஆண்டு 20.1% என அதிகரித்ததாக, தெலுங்கானா சமூக மேம்பாட்டு அறிக்கை தெரிவிக்கிறது. மொத்த பயன்பாட்டு நிலத்தில் 14.8% குத்தகைக்கு விடப்பட்டவை; இது 2002-03 ஆம் ஆண்டில் 3.1% ஆக இருந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (ஓ.பி.சி.) மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் (எஸ்.சி.) முறையே 16.3% மற்றும் 14.6% என நிலங்களை அதிகபட்சம் குத்தகைக்கு எடுத்துள்ளன.

உரிமம் இல்லாததால் குத்தகைதாரர்கள் நிறுவனங்கள் சார்ந்த ஆதரவையோ, அரசின் கடனுதவி, மானியம், காப்பீடு மற்றும் ரிது பந்து எனப்படும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 8,000 வழங்கும் பிரதான உள்ளீட்டு திட்ட பயன்களோ கிடைப்பதில்லை. “நில உரிமம் இல்லாததால் ஒரு விவசாயி ஆண்டுக்கு ரூ.50,000 முதல் ரூ.1,00,000 வரை இழப்பை சந்திக்கிறார்” என்று பேராசிரியர் சுனில் குமார் கூறுகிறார். இவர், நல்சார் (NALSAR) சட்ட பல்கலைக்கழகத்தின் பழங்குடி மற்றும் நில உரிமைகள் மைய இணை பேராசிரியர் மற்றும் ஆலோசகர். மேலும், மற்றும் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட லாபமற்ற கிராமப்புற மேம்பாட்டு நிறுவனத்தின் (இப்போது லேண்டேசா என அழைக்கப்படுகிறது) ஒரு முன்னாள் மாநில இயக்குனர்.

நல்கொண்டா மாவட்டம், ராமவத் தண்டாவை சேர்ந்த ராமவத் லகியா, ரூ.9 லட்சம் கடன் செலுத்த முடியாமல் 2017-ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தனது மகன் ராமவத் ஷங்கரின் புகைப்படத்துடன் உள்ளார். 1.5 ஏக்கர் நிலம் வைத்திருந்த ஷங்கர், மேலும் 15 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தார். குத்தகைக்கு எதிராக கடும் சட்டங்கள் இருந்தும், தெலுங்கானாவில் அவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. உரிமம் இல்லாததால் அரசின் சலுகைகளும் கிடைப்பதில்லை.

பருத்தி சாகுபடிக்கு உகந்த, மண் வளம் கொண்ட வாரங்கல் மற்றும் அடிலாபாத் பிராந்தியங்களில் குத்தகைத்தொகை ஏக்கருக்கு ரூ.15,000 முதல் 20,000 வரை வசூலிக்கப்படுகிறது. நீர்ப்பாசன வசதி மோசமான நல்கொண்டா மற்றும் மெஹ்பூபா நகர் பிராந்தியங்களில் ஏக்கருக்கு ரூ.2000 முதல் 5,000 வரை வேறுபடுகிறது. விவசாய பருவத்தின் தொடக்கத்திலேயே குத்தகை தொகை செலுத்த வேண்டும்; வங்கிகளும் கடன் வழங்க முன் வராத நிலையில் குத்தகை எடுத்த விவசாயிகள் தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் 75% பேர், குத்தகைதாரர்களாக இருந்தவர்கள் என்பது, ஆர்.எஸ்.வி.- டிஐஎஸ்எஸ் ஆய்வில் தெரிய வந்ததுள்ளது ஆச்சரியமளிக்காத ஒன்று தான். தற்கொலை செய்து கொண்டவர்களில் பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகள், தனியார் கந்துவட்டிக்காரர்களிடம் ரூ.4 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கியவர்கள். அவர்களுக்கு அரசு வங்கிகள் கடன் வழங்க முன்வராததால், அரசின் கடன் தள்ளுபடி சலுகையை பெறும் தகுதி அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இந்தியாவில் பரிசோதனை முயற்சியாக, முதன்முதலாக ஒன்றுபட்ட ஆந்திராவில், நில உரிமம் பெற்ற சாகுபடி சட்டம் 2011-ல் கொண்டு வரப்பட்டது. இது, கடன் உள்ளிட்ட அரசின் பிற சலுகைகளை பெற குத்தகை விவசாயிகளுக்கு, கடன் தகுதி அட்டைகள் (LECs) வழங்குகிறது.

கடந்த 2013-14ஆம் ஆண்டில் தெலங்கானா மாவட்டங்களுக்கு 419,412 அட்டைகள் வழங்க ஆந்திரா அரசு இலக்கு நிர்ணயித்தது; ஆனால், 43,000 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டதாக, ஆர்.எஸ்.வி. புள்ளி விவரங்கள் கூறுகின்றன. புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படாததால் மாநிலத்தில் உள்ள குத்தகைதாரர்களின் சரியான எண்ணிக்கை இல்லை என்றாலும், மாநில அரசின் அட்டை வழங்கல் இலக்கு, குத்தகைதாரர்களின் ஒருபகுதி எண்ணிக்கை என்று, ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தெலுங்கானா அரசு, ஒவ்வொரு ஆண்டும் குறைந்த கடன் தகுதி அட்டைகளையே வழங்கியது; 2016ல் மட்டும் 43,669 பேருக்கு வழங்கப்பட்டது. 2015-ல் வழங்கப்படவில்லை; 2017-ல் 12,000 பேருக்கு கடன் தகுதி அட்டை வழங்கப்பட்டது. 2018-ல் இதுவரை அடிலாபாத் மாவட்டத்தில் மட்டும் 5000 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

“கடன் தகுதி அட்டைகள் இருந்தும் கூட, குத்தகை விவசாயிகளுக்கு, அவர்களின் பெயரில் நில உரிமம் இல்லாவிட்டால், வங்கிகள் கடன் தர மறுக்கின்றன. கடன் தகுதி அட்டை ஓராண்டுக்கு (மட்டுமே) செல்லத்தக்கது என்பதால் வங்கிகள் தேவையற்ற ஆபத்தை எதிர்கொள்ள தயங்குகின்றன” என்று, ஐதராபாத்தை சேர்ந்த விவசாயிகள் நல ஆர்வலரான கொண்டல் ரெட்டி, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

விவசாயம் எவ்வாறு பயன்படுத்தவில்லை

கடந்த 2016-ல், வாரங்கல் (கிராமப்புற) மாவட்டம் நர்சக்கப்பள்ளியை சேர்ந்த 38 வயது இதிக்யாலா சுதாகர், அவரது 35 வயது மனைவி ஜோதி இருவரும் பருத்தி சாகுபடியில் இருந்து மிளகாய்க்கு மாறினார். அருகேயுள்ள நிலங்களில் மிளகாய் குவிண்டாலுக்கு 2014ம் ஆண்டில் ரூ.13,000 மற்றும் 2015ம் ஆண்டில் ரூ.12,000 பெற்றனர். மிளகாய்க்கு நல்ல விலை தருவதாக ஐ.டி.சி. குழுமம் உறுதியின் பேரில் இம்முடிவுக்கு வந்தனர்.

தம்பதியர் இருவரும் தங்களில் எட்டு ஏக்கர் நிலத்தில் இருந்து ஏக்கருக்கு 20 குண்டால் வீதிம் 160 குவிண்டால் மிளகாயை அறுவடை செய்தனர். ஆனால் அந்த ஆண்டு மிளகாய்க்கான விலை கடுமையாக சரிந்து, குவிண்டாலுக்கு ரூ.1000 (மிளகாய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லை) என்ற நிலை இருந்தது. இதனால் அவர்கள் ரூ.6 லட்சம் கடனாளி ஆனார்கள். இதில், ரூ.50,000 மிளகாய் அறுவடை கூலிக்கே செலவானது.

அதிக விளைச்சல் காரணமாக அந்த தம்பதியினரால் சந்தையில் மிளகாயை நல்ல விலைக்கு விற்க முடியவில்லை. அவரது பயிரை சேகரிக்க யாரும் முன்வரவில்லை. அறுவடை செய்த மிளகாயை வயலிலேயே போட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சாகுபடி மிளகாய் குவிண்டாலுக்கு ரூ.13,000 என்ற நிலை மாறி, ரூ. 1000க்கு போனதால் நஷ்டமடைந்த இதிக்யாலா ஜோதியின் கணவர் சுதாகர், 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மிளகாய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாதது உள்ளிட்ட காரணங்கள் தெலுங்கானா சிறு, குறு விவசாயிகளின் தற்கொலை முடிவுக்கு முக்கிய காரணமாகும்.

விலை ஏற்றத்தாழ்வு, ஆதார விலையின்மை உள்ளிட்டவற்றுடன் குறைந்த மழை, பூச்சித் தாக்குதல்கள் போன்றவற்றுடனும் விவசாயிகள் போராட வேண்டியுள்ளது. இதனால் குறைந்த விளைச்சல் ஏற்பட்டு விவசாயம் செய்ய இயலாத நிலை உண்டாகிறது.

தெலுங்கானா மாநிலம் மழையை சார்ந்து மானாவாரி விவசாயத்தையே பெரும்பாலும் நம்பியுள்ளது. அங்கு கரீப் (ஜூன் முதல் அக்டோபர்) முக்கிய பயிர் பருவமாகும். தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ள விவசாய புள்ளி விவரங்களின்படி கடந்த 30 ஆண்டுகளில் 23 ஆண்டுகள் வறட்சியே நிலவி வந்துள்ளது.

இதனால், 70% விவசாய குடும்பங்கள் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஆழ்துளை கிணறுகளை தோண்டி கடனாளிகளானதாக, தெலுங்கானா சமூக மேம்பாட்டு அறிக்கை கூறுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைவுக்கு விவசாயிகளுக்கு 24 x 7 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்குவது காரணமல்ல.

நீர்ப்பாசனத்திற்கான அணுகல் சமமற்றதாக உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களில் 25.5%, பழங்குடியினரில் 29.9% பேரே பாசனத்திற்கு அணுகுவதாக, தெலுங்கானா சமூக மேம்பாட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

நீர்த்தேக்க தண்ணீர் விவசாயிகளில் செலவில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவானோருக்கு திருப்பிவிடப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

காளீஸ்வரம் திட்டம் போன்ற அதிக செல்விலான திட்டங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அரசு கூறுவது போல் இத்திட்டம் அதிக நீர்ப்பாசன திறனை கொண்டிருக்காது என்பது அவர்களின் கருத்து.

இருப்பினும் மிஷன் காகாடியா எனப்படும் தொட்டிகள், நீராதாரங்களை மேம்படுத்தும் சிறிய நீர்ப்பாசனத்திட்டத்தால் நேர்மறை பலன்கள் கிடைத்ததாக, நபார்டு (NABARD) மதிப்பிட்டு அறிக்கை தெரிவிக்கிறது. இத்திட்டம் ஆண்டுக்கு 45.6 சதவீத அளவுக்கு நீராதார வளத்தை மேம்படுத்தியுள்ளதாக அது கூறுகிறது. இருப்பினும் தலைமை கணக்காளர் அறிக்கையில், மூன்று மாதங்களில் 20% தொட்டிகளை மீட்டு சீரமைப்பது என்ற இலக்கு எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்துமே, அரசு திட்டங்கள், குறைந்தபட்சம் போதுமானதாக இல்லை. நீர்பாசன வசதி இல்லாததால், மாநிலத்தின் பயிர்சாகுபடி தீவிரம் (ஒரு விவசாய வருடத்தில் அதே நிலத்தில் பயிரிடப்படும் பயிர் எண்ணிக்கை) 116% என்ற விகிதத்தில் உள்ளது. இது, தேசிய சராசரியான 137% என்பதைவிட குறைவு. பயிர் விளைச்சல் அடிக்கடி பாதிக்கப்படும்.

இந்த ஆண்டு, முக்கிய பயிரான பருத்தி விளைச்சல் மோசமான மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்திக்கான நடப்பாண்டு விலை ரூ.5,250 முதல் ரூ.5,300 வரை கிடைத்தாலும், இது 2017 விலையான ரூ.4250 ஐ விட அதிகமாக இருப்பினும், நல்ல பலனை தராது என்று விவசாயிகள் கருதுகின்றனர்.

”எங்களுக்கு 6-7 குவிண்டால் விளைச்சல் கிடைக்காமல், குவிண்டால் ஒன்று ரூ.6,000 என்று விற்கப்பட்டாலும் அது பலன் தராது” என்று நல்கொண்டா மாவட்டம், அங்குடிபேட்டா தண்டா பகுதி விவசாயி ராம்ஜி கூறுகிறார். அரிதான சில நல்ல ஆண்டுகளில் பருத்தி விளைச்சல் ஏக்கருக்கு 10 குவிண்டால் வந்ததுண்டு என்று விவசாய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு மாறாக, அடிலாபாத் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளம், 1,60,000 ஏக்கர் சாகுபடியை, பெரும்பாலும் பருந்தியை அடித்து சென்றன. ”வழக்கமாக ஆண்டுக்கு மூன்று முறை பருத்தி பறிப்போம். இம்முறை 3வது முறை பருத்தி பறிக்கவில்லை; சங்கராந்தியின் (ஜனவரியில் வரும் அறுவடைத் திருநாள்) போது தான் பறிப்போம்” என்று அடிலாபாத் தனூரை சேர்ந்த பருத்தி விவசாயி பூமண்ணா தெரிவித்தார்.

அத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக தெலுங்கானா பகுதி பருத்தி சாகுபடியை பூச்சி தாக்குதல்களும் அழித்து வருகின்றன. அடிலாபாத் மாவட்ட நிர்வாகத்தின் மதிப்பீட்டின்படி, பருத்தி பயிரில் 20% இழப்பு ஏற்பட்டது. வாரங்கல் தர்மசாகர் நீர்த்தேக்க பகுதியில் பாதிக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டது.

விவசாயிகளும் மோசமான விதைகள் மற்றும் போலி பூச்சிக்கொல்லிகளுடன் போராட வேண்டியுள்ளது. வாரங்கல் (கிராமப்புற) மாவட்டம், அம்பாலா கிராமத்தில் 30 விவசாயிகள் 70 மூட்டை விதை நெல்லை, அங்குள்ள வேளாண் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிச் சென்றனர். போலியான விதையால் அவர்களின் 60 ஏக்கர் நெல் சாகுபடி பொய்த்தது. இது தொடர்பாக, உள்ளூர் எம்.எல்.ஏ. அலுவலகம், மாநில நிதி அமைச்சர் எட்டலா ராஜேந்திரன் வீடு உட்பட பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தியும் கொஞ்சம் பலனே கிடைத்தது.

மேக்கு சூப்பர்-பைன் பையம் பண்டிசேடி , மேமும் கண்ட்ரோல் பையம் தினேடி” என்று, அம்பாலாவை சேர்ந்த, ஐந்து ஏக்கரை குத்தகைக்கு எடுத்துள்ள 30 வயது உ. உமர் கூறுகிறார். இதன் பொருள் “நாங்கள் நல்ல தரமான அரிசியை விளைவிக்கிறோம்; ஆனால், ரேஷன் கடையில் மானிய அரிசியை தான் சாப்பிடுகிறோம்” என்பதாகும்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்காதது ஏன்

"ஒவ்வொரு அரசாங்கமும் பயிர் கடன் தள்ளுபடியைப் பற்றி மட்டுமே பேசுகின்றன, அவை நம்மைப் போன்ற விவசாயிகளுக்கு பயனற்றது," என்று, அடிலாபாத் குத்பல்லா கிராம விவசாயி சிர்ரா எர்ரன்னா கூறுகிறார். “நாங்கள் கேட்கும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விளைச்சலுக்கு நியாயமான விலை எங்கே?” என்பது அவரது கேள்வி.

குறைந்தபட்ச ஆதார விலை பிரச்சனை என்பது, அது சட்டபூர்வமானது அல்ல; ஆனால் அது ஒரு குறிப்பிடத்தக்க விலை என்று, ஆர்.எஸ்.வி.யின் கன்னகந்தி விளக்கம் அளித்தார். ”உண்மையில் சந்தையில் விவசாயிகளுக்கு கிடைக்கும் விலை விஷயத்தில் தனியார் ஆதிக்கம் செலுத்தி நிர்ணயம் செய்கின்றனர். ஏனெனில் விவசாயிகள் பெரும்பாலும் தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்குகின்றனர். சந்தைக்கு வரும் முன்பே தனியாரிடம் அவர்கள் விளைபொருளை விற்றுவிடுகின்றனர்”.

அரசு அமைப்புகளான மார்க்பெட் (MARKFED), தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) மற்றும் இந்திய பருத்தி கழகம் (CCI) ஆகியன, குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து பருத்தியை வாங்குகின்றன. எனினும் அவை, மொத்த உற்பத்தியையும் வாங்குவதில்லை.

"பருத்தி பயிரில் 10% க்கும் மேல் விவசாயிகளிடம் இருந்து சி.சி.ஐ. வாங்கவில்லை" என்று, வாரங்கல்லை சேர்ந்த விவசாய செலவினங்கள் மற்றும் விலைகள் குறித்த ஆணைக்குழுவின் ஆலோசகரும், தொழிற்சங்க முன்னாள் தலைவருமான சந்தர் ராவ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

ஆசியாவின் இரண்டாவது பெரியதான, வாரங்கல்லில் உள்ள எனமமுலு சந்தையில், கடந்தாண்டு விளைச்சலான 50 மில்லியனில் 5,00,000 குவிண்டாலுக்கு மேல் பருத்தி கொள்முதல் செய்யப்படவில்லை என்று கூறினார்.

ஆசியாவின் இரண்டாவது பெரியது என்ற சிறப்பை பெற்ற வாரங்கல்லில் உள்ள எனமமுலு பருத்தி சந்தைக்கு கொண்டு செல்ல,லாரியில் ஏற்றப்படும் பருத்தி.

இந்திய பருத்தி கழகத்திற்கு விவசாயிகள் விற்பனை செய்ய முடியாததற்கு ஒரு காரணம், பருத்தியின் ஈரப்பதம் 8% முதல் 12%க்குள் (ஈரப்பதம் அதிகரித்தால் விலை குறையும்) இருக்க வேண்டும் என்பது தான். பருத்திக்கழகம் நிராகரிக்கும் பருத்தி, தனியாரிடம் மிக குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது.

அவற்றை வாங்கும் தனியார், ஜின்னிங் மில்லில் சரிசெய்து உருட்டி பருத்தி கழகத்திடம் நல்ல விலைக்கு விற்கின்றனர். மொத்த சந்தையும் தனியார் ஒருசிலரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

”வாரங்கல் சந்தையின் மொத்த கட்டுப்பாடும் நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் மற்றும் கமிஷன் ஏஜெண்டுகளின் கைகளில் உள்ளன. அவர்கள் இரண்டு அல்லது மூன்று பெரும் முதலீட்டாளர்களின் நிதி பங்களிப்போடு இதை மேற்கொள்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் ரெட்டிகள் அல்லது கோமுட்டி (ஆந்திரா, தெலுங்கானாவில் வணிகம் செய்யும் சாதியினர்) ஆக உள்ளனர். எந்த விவசாயி விற்கலாம் என்பதை அவர்களே தீர்மானிக்கின்றனர்” என்று வாரங்கல்லை விவசாய நல ஆர்வலர் பீரன் ராமுலு குற்றம்சாட்டுகிறார்.

கடந்தாண்டு பருத்தி கழகத்தால் நிராகரிக்கப்பட்ட பருத்தியை குவிண்டாலுக்கு ரூ.2,500 முதல் ரூ.3,000 என்ற விலைக்கு தனியார் வாங்கினர். இதை, ரூ.4,320 என்ற ஆதரவு விலை கொடுத்து தனியாரிடம் இருந்து பருத்திக்கழகம் வாரங்கல் சந்தையில் கொள்முதல் செய்தது என்று, ராமுலு மேலும் தெரிவித்தார்.

குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய, தெலுங்கானா அரசு நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை என்பது கன்னகந்தியின் குற்றச்சாட்டு. ”முன்னதாக, ஆதார விலையில் விளை பொருட்களை வாங்குவதற்கு, மார்க்பெட்டிற்கு ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு, வங்கி கடன் பெற பயன்படுத்தினால் மட்டுமே அது கொள்முதல் செய்ய இயலும். மற்ற விவசாயிகள் வேறு வழியின்றி தனியரிடம் விற்றுவிடுகின்றனர்.

ரிது பந்துவில் நியாயமில்லை என்று கருதுவது ஏன்?

விவசாயிகளின் நிலைமையை தணிக்கும் வகையில் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், ஏப்ரல் 2018-ல் ரிது பந்து மற்றும் ரிது பீமா என்ற இரண்டு திட்டங்களை அறிவித்தார்.

ரூ.12,000 கோடி (1.7 பில்லியன் டாலர்) மதிப்பிலான ரிது பந்து திட்டத்தில் விவசாயிகளுக்கு உதவியாக ஏக்கருக்கு ரூ.8,000 (இரு சம தவணைகளாக) வழங்கப்படும். ரிது பீமா என்பது ஆயுள் காப்பீடு திட்டமாகும். இதில் காரணமின்றி விவசாயி இறக்கும் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க, இது வகை செய்கிறது. மாநில அரசின் புள்ளி விவரங்களின் படி, 5.7 மில்லியன் பேர் ரிது பந்து திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டங்களில் பயன்பெற வேண்டுமெனில், அரசு பதிவேடுகளை பார்க்கும் போது, பயனாளி நிலம் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான விவசாயிகள் குத்தகைதாரர்களாகவும், நில உரிமம் இல்லாத பெண்கள், வனப்பகுதியில் சாகுபடி செய்யும் “பொடு” விவசாயிகளாகவும் உள்ளனர். குத்தகைதாரர்கள், மற்றும்வன உரிமை சட்டத்தின் (FRA) கீழ் உரிமம் பெற இயலாத, வனப்பகுதி சாகுபடியாளர்களும் இத்திட்டத்தில் பலன் பெற இயலாது.

சிறிய மற்றும் பெரிய விவசாயிகளுக்கு ஒரே சீரான முதலீட்டு ஆதரவளிக்கும் வகையில், சிறு விவசாயிகளுக்கு அதிகம் தரக்கூடிய முற்போக்கு ஆதரவை எதிர்க்கும் கிராமத்திற்கு வெளியே வசிக்கும் விவசாயில் அல்லாத பெரிய நில உரிமையாளர்களுக்கு பயன் அளிக்கிறது; யாருக்கும் விவசாய வருவாய் முதன்மை ஆதாரமாக இது இல்லை.

குத்தகை விவசாயிகள், ரிது பந்து திட்டத்தில் சேர்க்கப்படாதது, அங்குடிபேட்டை தண்டா பகுதி விவசாயிகளுக்கு அரசின் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ”இந்த திட்டம் யாரை ஆதரிக்கிறது?” என்கின்றனர். சொந்த நிலம் இல்லாத மற்ற விவசாயிகள், பெண்கள், பொத்து விவசாயிகளுக்கு பொருந்தாது.

”அரசு இதை ’பெட்டுபடி சஹாயம் [உள்ளீட்டு ஆதரவு] .சரி, உள்ளீட்டு ஆதரவை யார் பெற வேண்டும்?” உண்மையில் விவசாய நிலங்களில் முதலீடு செய்பவர்களா? அல்லது ஐதராபாத்தில் அமர்ந்திருப்பவர்களா?” என்று நல்கொண்டாவின் அங்குடிபேட்டாவின் லம்பாடி வகுப்பைச் சேர்ந்த விவசாயி ராம்ஜி கேட்கிறார். ராம்ஜிக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது; மேலும் 12 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்தார். இத்திட்டத்தின் கீழ் அவருக்கு ரூ.6000 மட்டுமே கிடைத்தது. ஆனால் அவரது ரெட்டி (நில உரிமம் கொண்டு நில உரிமையாளரோ ரூ.48,000 பெற்றதாக அவர் கூறினார்.

"இந்த நில உரிமையாளர்கள் பயிர் கடன் சலுகையை அனுபவிப்பது போலவே, காப்பீட்டு திட்டங்களின் நன்மைகளை அள்ளிக் கொள்கின்றனர். ஏனென்றால் நிலத்தின் உரிமை அவர்களின் பெயரில் இருப்பது தான். வியர்வை சிந்தி நிலத்தில் உழைப்பது நாங்கள்; ரிது பந்து திட்ட பலன்களை அனுபவிப்பது அவர்கள்” என்று அடிலாபாத் அருகே இந்திரவேலி கிராமத்தை சேர்ந்த கோண்ட் சமுதாய விவசாயி பூபேஷ் தெரிவிக்கிறார்.

வழங்கப்படும் பணம் கூட போதிய அளவு இல்லை என்று விவசாயிகள் வேதனையோடு கூறுகின்றனர்.

"என் பெயரில் உள்ள அரை ஏக்கர் நிலத்திற்கு வெறும் ரூ. 2,000 தான் கிடைத்தது. ஆனால், ஏக்கருக்கு ரூ. 4,000 உழுதலுக்கான செலவினத்தை, இதை கொண்டு நான் எப்படி ஈடு செய்வது? பருத்தி விதைப்பதற்கு மூன்று முறை என் நிலத்தை உழ வேண்டும், "என்பது, நல்கொண்டா விவசாயி சல்லியின் புலம்பல் ஆகும்.

இத்திட்டத்தால் சிறு, குறு விவசாயிகள் குறிப்பாக குத்தகை விவசாயிகளுக்கு அரசின் ஆதரவு விலை, உள்ளீட்டு உதவி, சலுகை போன்றவை பெரிய நிலஉரிமையாளர் வாயிலாக சென்றடையும்; அதற்கு நில உரிமையாளர்கள் கடமைப்பட்டவர்கள் என்று அரசு கருதியது.

"பெரிய நில உரிமையாளர் எங்களுக்கு ருது பந்து திட்ட பணத்தை குத்தகைதாரர் விவசாயிகளுக்கு அனுப்பியதாக முதல்வர் கே.சி.ஆர் நினைத்தால், அவர் முதலில் ஐதராபாத்தில் இருந்து இங்கு வந்து பார்க்க வேண்டும்” என, அடிலபாத் மாவட்டம் தனுர் கிராமத்தை சேர்ந்த ஜக்க மலகண்ணா கொந்தளிக்கிறார்.

”பணத்தை தருவதற்கு பதில் நில உரிமையாளர்கள் அடுத்த பருவத்தில் குத்தகை தொகையை உயர்த்திவிடுவார்கள். நான் ஏக்கருக்கு ரூ.12,000 கொடுத்து வந்தேன். அடுத்ததாக, ரூ.14,000 கேட்டுள்ளனர்” என்கிறார் அவர்.

தெலுங்கானாவில் இந்தியா ஸ்பெண்ட் பயணம் மேற்கொண்டபோது நேரில் கண்டது விவசாயிகளின் இத்தகைய கோபத்தை தான்.

சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து நிலம் தொடர்பாக கோரிக்கை உள்ளது; இதை நில உரிமையாளரும் அறிந்திருக்கிறார். ”ஆனால் அவர்களோ,’செஸ்தி செய்யி லெகுந்தி லீடு” (எடுத்துகோ, அல்லது விட்டிரு) என்று சொல்வதாக, ராஜசேகர ரெட்டி தெரிவித்தார். இவர், அடிலாபாத் மாவட்டம் தனூரில் 15 ஏக்கர் நிலத்தை வைத்துள்ள பெரிய விவசாயி; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரும் கூட.

ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி (TRS) கட்சி தனது சட்டசபை தேர்தல் அறிக்கையில், ரிது பிந்து திட்டத்தில் வழங்கப்படும் உதவி, ரூ.10,000 ஆக அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், குத்தகை விவசாயிகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

கடந்த 2014 தேர்தல் அறிக்கையில், 1930ஆம் ஆண்டில் இருந்து புதுப்பிக்கப்படாமல் உள்ள நிலப்பதிவுகள் புதுப்பிக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தது. அதன்படி, ஆட்சிக்கு வந்ததும் ரிது பந்து திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏதுவாக, 5.7 மில்லியன் நில உரிமையாளர்களின் உரிமத்தை புதுப்பிக்க, நில ஆவணம் புதுப்பிக்கும் திட்டம் (LRUP) மேற்கொள்ளப்பட்டது.

இப்பணியில் இன்னும் பல ஆவணங்கள் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு, இன்னும் பல சிறு, குறு விவசாயிகள் தங்களின் பெற்றோர் பெயரில் உள்ள நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்ற இயலாமல் உள்ளனர். இது முடிய ஓராண்டுக்கு மேலாகும். அதற்குள் வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு பலமுறை போய் வர வேண்டியிருக்கும் என்று, இந்தியா ஸ்பெண்டிடம் சுனில் குமார் தெரிவித்தார்.

பல கிராமவாசிகள் இந்த புதுப்பிக்கும் திட்டத்தை பற்றி தெரியாது என்று கூறினர், மற்றவர்களோ, கிராம வருவாய் அதிகாரிகள் உள்ளூர் செல்வாக்கு நபர்களுடன் இணைந்து வேண்டியவர்களின் பெயரில் நிலத்தை பதிவு செய்து கொள்ளும் பணி நடப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.

அடிலாபாத் மாவட்டம் தனுர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்டவர்களை இந்தியா ஸ்பெண்ட் குழு சந்தித்தது. மாநில அரசால் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்பட்ட ‘பட்டாதாரர் பாஸ் புத்தகம்” இருந்தும், அவர்கள் யாருமே ருது பந்து திட்டத்தில் எவ்வித உதவியையும் பெறவில்லை.

”நில பதிவேடுகள் புதுப்பிப்பு பணி இறுதி இலக்கு என்றால், அது வேறுபட்டதாக - சமூக ஈடுபாடு உள்ளிட்ட கட்டங்களாக செய்ய வேண்டும். ரிது பந்து திட்டத்தை அரசு வெறும் கடமைக்காக செய்ததால், இதில் ஏராளமானோர் விடுபட்டனர். புதிய அரசு இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும்; இல்லாவிட்டால் சிறு, குறு விவசாயிகள் ஏராளமானோர் பாதிக்கப்படுவர்” என்று, நல்சாரின் சுனில் குமார் தெரிவித்தார்.

(ராவ், ஐதராபாத்தில் உள்ள இந்தியா ஸ்பெண்ட் ஆய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.