மும்பை: இந்தியாவின் ஏழை குழந்தைகளில் கிட்டத்தட்ட 47% பேருக்கு முழுமையாக நோய்த்தடுப்பு செய்யப்படவில்லை; இது, பணக்கார குழந்தைகளை விட 17 சதவீதம் புள்ளிகள் அதிகம். தேசிய சுகாதார தரவுகள் படி, தடுக்கக்கூடிய நோய்களுக்கு ஆளாகக்கூடியது மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பெரும் துயர் தரக்கூடிய சுகாதார செலவினங்களை ஏற்படுத்துகிறது. வீட்டுச் செல்வம் தவிர, பெற்றோரின் கல்வியறிவு, பிறப்பு ஒழுங்கு மற்றும் பிறந்த இடம் போன்ற காரணிகள் தடுப்பூசி போடுவதை பாதிப்பதாக, என்று தரவு காட்டுகிறது.

காசநோய் மற்றும் தட்டம்மை தடுப்பூசிக்கான பேசில் கால்மெட் குய்ரின் - பி.சி.ஜி (BCG) தடுப்பூசி ஒவ்வொன்றும் ஒரு டோஸ் பெற்ற 12 - 23 மாத குழந்தைகள், மற்றும் டிப்டீரியா-பெர்டுசிஸ்-டெட்டனஸ் - டிபிடி (DPT) தடுப்பூசி மற்றும் போலியோ தடுப்பூசி ஒவ்வொன்றும் மூன்று சொட்டுகள் முழுமையான நோய்த்தடுப்பு மருந்துகளாக கணக்கிடப்பட்டன. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 (2015-16) என்.எஃப்.எச்.எஸ் -4 (NFHS-4) இன் தரவுகளின்படி, நாடு முழுவதும், 38% குழந்தைகள் முழுமையாக நோய்த்தடுப்பு செய்யப்படவில்லை.

உலக சுகாதார அமைப்பு (WHO) தரவுகளின்படி, தடுப்பூசிகள் 2010 முதல் 2015 வரை உலகளவில் ஒரு கோடி உயிர்களைக் காப்பாற்றின. அத்துடன், நிமோனியா, வயிற்றுப்போக்கு, கக்குவான் இருமல், அம்மை மற்றும் போலியோ போன்ற நோய்களுடன் தொடர்புடைய துயரம் மற்றும் இயலாமை ஆகியவற்றில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டனர்.

மேலும், தடுப்பூசிகள் பேரழிவு தரக்கூடிய சுகாதார செலவுகளை - வீட்டுச் செலவுகளின் ஒரு குறிப்பிட்ட வரம்பைக் கடக்கும் - அம்மை நோய்க்கு 84%, கடுமையான நிமோகோகல் நோய்க்கு 29%, மற்றும் கடுமையான ரோட்டா வைரஸுக்கு 50% என்று குறைக்கலாம். இதன் மூலம் ஏழைக் குடும்பங்களை மருத்துவ செலவினத்தால் ஏற்படும் வறுமையில் இருந்து பாதுகாக்கலாம் என்று ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் கார்லோஸ் ரியுமல்லோ-ஹெர்ல் நடத்திய 2018 ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் இது மிகவும் முக்கியமானது; ஏனெனில், 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி கிட்டத்தட்ட 71% குடும்பங்கள் சுகாதார காப்பீட்டில் ஒரு உறுப்பினரை கூட கொண்டிருக்கவில்லை என்று தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு, 2015-16 கூறுகிறது. இந்த சதவீதம் ஏழை குடும்பங்களில் அதிகமாக உள்ளது; சுமார் 78% குடும்பங்கள் காப்பீடு செய்யப்படவில்லை. 50 நாடுகளின் குறைந்த நடுத்தர வருமானக் குழுவில் இந்தியர்கள் ஆறாவது பெரிய சுகாதார செலவினர்களாக உள்ளனர் என்று, நாங்கள் மே 2017 இல் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்த செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.2 -3.9 கோடி இந்தியர்களை வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளுகின்றன என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெரும் துயரை தரும் சுகாதார செலவினங்களின் சுமை ஏழைக் குடும்பங்களுக்கு அதிகமாக உள்ளது என்று கூறும் ஆய்வு, தடுப்பூசி பாதுகாப்பு விரிவாக்கம், நிதி ஆபத்துக்களில் இருந்து அவர்களை பாதுகாக்கும் என்கிறது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தை சேர்ந்த சச்சிகோ ஓசாவாவின் 2018 ஆய்வின்படி, நோய்க்கு சிகிச்சைக்கான செலவுகளை விட 16 மடங்கு அதிக வருமானத்தை, நோய்த்தடுப்பு மருந்துகள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அளிப்பதாக தெரிவிக்கிறது. இது குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் தடுப்பூசி பாதுகாப்பு அதிகரிப்பதற்கான முதலீட்டின் வருவாயை மதிப்பிடுகிறது. (இந்தியா குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு).

ஏழை குடும்பங்களை சேர்ந்த 53% குழந்தைகள் மட்டுமே ஏன் முழுமையாக நோய்த்தடுப்பு செய்யப்படுகின்றனர்?

"குறைந்தளவு தடுப்பூசி பாதுகாப்பு என்பதற்கு வறுமை மட்டுமே காரணமல்ல" என்று நோய், இயக்கவியல், பொருளாதாரம் மற்றும் கொள்கை மையத்தின் சுகாதார பொருளாதார நிபுணர் சுஷ்தா சாட்டர்ஜி, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "சிறுபான்மைக்குழுவைச் சேர்ந்தவர்கள், மற்றும் பெண் கல்வியறிவு குறைவு போன்ற பிற காரணிகள், வறுமையுடன் தொடர்படுத்தி, குறைந்த நோய் பாதுகாப்பை தீர்மானிக்கின்றன " என்றார். ஏழைக் குடும்பங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குறைந்தளவே பாதுகாப்பு உள்ளது.

டெல்லியில் உள்ள நகர்ப்புற ஏழை சமூகத்தில், இந்திய பொது சுகாதார நிறுவனமான நிவேதிதா தேவசேனாபதி நடத்திய 2016 ஆய்வின்படி, முழுமையான தடுப்பூசியின் முரண்பாடுகள் பெண் குழந்தைகள் மற்றும் முஸ்லீம் குடும்பங்களில் குறைவாக இருந்தன. தாயானவள் கல்வியறிவு பெற்றவராக இருந்தால், குழந்தை நகரத்திற்குள் பிறந்திருந்தால் (குடியேறாமல்), சுகாதார நிலையத்தில் பிறந்திருந்தால், அல்லது பிறப்புச் சான்றிதழ் வைத்திருந்தால் முழுமையான தடுப்பூசியின் முரண்பாடுகள் அதிகமாக இருந்தன.

மற்றவர்களுடன் (62%) ஒப்பிடும்போது முஸ்லிம்கள் குறைந்த தடுப்பூசி பாதுகாப்பு (55.4%) கொண்டிருந்தனர்; மேலும் தாயின் பள்ளிப்படிப்பில் தடுப்பூசி பாதுகாப்பு அதிகரித்தது என்று என்.எப்.எச்.எஸ். 4 தரவு காட்டுகிறது.

12ம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வியை பெற்றிருந்த தாய்மார்களின் 12-23 மாத வயதுடைய கிட்டத்தட்ட 70% குழந்தைகள், அனைத்து அடிப்படை தடுப்பூசிகளையும் பெற்றனர்; இது பள்ளி கல்வி பெறாத தாய்மார்களின் குழந்தைகள் விகிதம் 52% என்று ஒப்பிடும் போது அதிகமாகும். வறுமை என்பது கல்வியறிவு அளவுடன் தொடர்புடையது: என்.எப்.எச்.எஸ்.-4 இன் படி,ஏழை குடும்பங்களில் சுமார் 3% பெண்கள் மற்றும் 7% ஆண்கள் 12 அல்லது அதற்கு மேற்பட்ட பள்ளிப்படிப்பை முடித்தனர்; பணக்கார குடும்பங்களுடன் ஒப்பிடும் போது இது, 51% பெண்கள் மற்றும் 58% ஆண்கள் என்றிருந்தது.

ஆறாவது அல்லது அதற்கு மேலாக பிறக்கும் குழந்தையை விட (67% VS 43%) முதலில் பிறக்கும் குழந்தைகளுக்கு அனைத்து அடிப்படை தடுப்பூசிகளையும் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம், இது மீண்டும் வறுமையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 9, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளபடி, ஒரு குடும்பத்திற்கு அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் இருப்பின், உடல்நலம், தகவல் மற்றும் கல்வி பற்றாக்குறை அதிகரிக்கிறது. அதிக குழந்தைகளுடன் உள்ள குடும்பங்கள் 22% வறுமை விகிதத்தை அனுபவிக்கின்றன; குழந்தைகள் இல்லாத குடும்பங்கள் 8% வறுமை விகிதத்தை பதிவு செய்கின்றன.

மிஷன் இந்திர தனுஷ் தடுப்பூசி திட்ட தழுவல் எவ்வாறு விரிவாகிறது

2014 ஆம் ஆண்டில் மத்திய அரசு, இந்திர தனுஷ் இயக்கத்தை அறிமுகம் செய்தது. இது, தமது தீவிரமான முயற்சிகள் மூலம் 2020 ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை முழுமைவதையும் சென்றடைய விரும்புகிறது.

"கிராமங்களில் பொதுவாக அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷா) உள்ளனர், மேலும் ஆஷாக்கள் இல்லாத இடங்களில் கிராமப்புறங்களில் துணை சுகாதார மையங்கள் உள்ளன" என்று சாட்டர்ஜி, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "ஆனால் நகர்ப்புறங்களில் இத்தகைய அடிப்படை வசதிகளை எளிதில் அணுக முடியாது" என்றார்.

2014 மற்றும் 2018ஆம் ஆண்டுக்கு இடையில் - மிஷன் இந்திர தனுஷ் தொடங்கப்பட்ட பின்னர் - 12 -23 மாத வயதுடைய இந்திய குழந்தைகளுக்கான ஒட்டுமொத்த நோய்த்தடுப்பு பாதுகாப்பு 29 சதவீத புள்ளிகள் - அதாவது 62% என்பது, 91% ஆக - ஆண்டுக்கு சுமார் 7 சதவீத புள்ளிகள் உயர்ந்தன. இதற்கு முன்னர், 2006 மற்றும் 2014 க்கு இடையில், நோய்த்தடுப்பு பாதுகாப்பு 18 சதவீத புள்ளிகள் - அதாவது 44% இல் இருந்து 62% ஆக ஆண்டுக்கு சுமார் 2 சதவீத புள்ளிகள் உயர்ந்தன.

டிசம்பர் 2018 தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தியின்படி, பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் இதழ் இத்திட்டத்தை உலகளவில் 12 சிறந்த நடைமுறைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தது.

அக்டோபர் 2017 இல், பிரதமர் நரேந்திர மோடி தீவிர இந்திர தனுஷ் இயக்கத்தை தொடங்கினார் - இது டிசம்பர் 2018 க்குள், 90% க்கும் அதிகமான நோய்த்தடுப்பு மருந்துகளை அடைவதற்கான இலக்கை கொண்டிருந்தது. "எந்தவொரு குழந்தையும் தடுப்பூசியால் தடுக்கப்படும் நோயால் பாதிக்கப்படக்கூடாது," என்று அவர் கூறினார்.

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் நோய்த்தடுப்பு பாதுகாப்பு அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் அதே நேரம், பெண் கல்வியறிவை மேம்படுத்துவது நிரந்தர பயன் தருவதாக இருக்கும் என்று தேவசேனாபதி தனது 2016 ஆய்வில் தெரிவித்தார். பெண்களின் கல்வியறிவை வளர்ப்பது, அவர்களின் முடிவெடுக்கும் திறனையும், சமூக மற்றும் கலாச்சார தடைகளை சமாளிக்கும் ஆற்றலையும் மேம்படுத்தும்.

(பங்க்தி அந்தானி, நியூயார்க்கில் உள்ள CUNY பருச் கல்லூரி நிதி இளங்கலை மாணவர்; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.